தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28, தே.மு.தி.க.வுக்கு 10, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 5, ம.தி.மு.க.வுக்கு 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒருசில சிறிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ள தி.மு.க.வில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது தற்போது அடையாளம் காணப்பட்டு வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறைந்தது 165 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக போட்டியிடும் என்றாலும், கூட்டணி கட்சிகள் சிலவும் தி.மு.க.வின் சின்னமான உதயசூரியனில் களம் இறங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா “பாபநாசம், மணப்பாறை, வாணியம்பாடி, திருச்சி கிழக்கு ஆகிய நான்கு விருப்பத் தொகுதிகளின் பட்டியலை அளித்துள்ளார். அதில் இரண்டை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியை ஏற்கனவே மதிமுக கேட்டு வருகிறது. தற்போது மனிதநேய மக்கள் கட்சியும் கேட்கிறது. இது ஒருபுறம் இருக்க இந்த தொகுதியை ஏற்கனவே கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியது போதும், இந்த முறை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளும் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனால், திருச்சி கிழக்கு தொகுதிக்கு அதிக ‘டிமாண்ட்’ நிலவுகிறது. இந்த தொகுதியில் திமுக போட்டியிடுவதா? அல்லது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவதா என தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த தொகுதியில் கடந்த முறை கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் இனிகோ இருதயராஜ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.