Rock Fort Times
Online News

திருச்சியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படாததால் பள்ளத்தில் சிக்கும் கனரக வாகனங்கள்…!

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. இந்தத் திட்டம் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் பல்வேறு இடங்களில் சரியாக மூடப்படாததால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், குழிகள் முறையாக மூடப்படாததால் கனரக வாகனங்கள் அந்த பள்ளத்தில் சிக்கி கொள்கின்றன. அந்தவகையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 39 -வது வார்டு பாலாஜி நகர் பிரதான சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டது. பணிகள் நிறைவுற்றதாக கூறப்படும் நிலையில் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், அந்த சாலை தரமாக அமைக்கப்படாததால் அந்த வழியாகச் சென்ற கனரக வாகனம் ஒன்று பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் அவ்வழியாக வரக்கூடிய கார், பள்ளி வாகனங்கள், சரக்கு வாகனங்கள் வர இயலாத நிலை ஏற்பட்டது. லாரி உரிமையாளர், சொந்த செலவில் கிரேன் மூலம் பள்ளத்தில் சிக்கிய சரக்கு வாகனத்தை மீட்டார்.  இதுபோன்று இப்பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு பாரங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் அடிக்கடி பள்ளத்தில் சிக்கி கொள்கின்றன. ஆகவே, இந்த சாலையை தரமாக அமைக்க கோரி அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனுக்கள் அளித்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இனியும் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளையும், சாலைகளையும் முறையாக, தரமாக அமைத்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்