Rock Fort Times
Online News

திருச்சியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை- * பல இடங்களில் மேற்கூரைகள் பறந்தன * ஒரு மணி நேரம் ரயில் தாமதம் (வீடியோ இணைப்பு)

திருச்சியில் பல நாட்களுக்கு மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. கோடை மழை பெய்யாதா? என்று பொதுமக்கள் ஏங்கி வந்த நிலையில் நேற்று (மே 4) இரவு 7 மணி அளவில் கோடை மழை பெய்தது. இடி, மின்னல், பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த இந்த கனமழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. சூறைக்காற்றின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்தன. ஒரு சில இடங்களில் மின் வயர்கள் மீது மரக்கிளைகள் விழுந்ததன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் வினியோகம் பல மணி நேரம் நிறுத்தப்பட்டது. பல இடங்களில் கடைகள் மற்றும் அலுவலகங்களின் மேற்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தன. ஒரு சில இடங்களில் சாய்ந்து விழுந்தன. திருச்சி வரகனேரி மாரியம்மன் கோவில் எதிரே உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய உதவி மின் பொறியாளர் மகாலட்சுமி நகர் பிரிவு அலுவலகத்தின் நுழைவு வாயில் உள்ள பெயர் பலகை சாலை ஓரமாக செல்லும் நெட்வொர்க் கேபிள் ஒயர்களில் சாய்ந்து ஆபத்தான நிலையில் நிற்கின்றன. ஏதேனும் விபத்து ஏற்படும் முன்பு உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெயிலின் தாக்கத்திலிருந்து வாகன ஓட்டிகள் ஆசுவாசப்படுத்திக் கொள்ள பழைய பால்பண்ணை சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூரை நேற்று பெய்த மழையால் கிழிந்து தொங்குகிறது. பெங்களூரிலிருந்து திருச்சி வழியாக மதுரை நோக்கி செல்லும் வந்தே பாரத் ரயில் நேற்று திருச்சி கோட்டை ரயில் நிலையம் தாண்டி வந்து கொண்டிருந்தது. அப்போது மின் பாதையில் திடீரென பழுது ஏற்பட்டது. அதன் காரணமாக ரயிலை தொடர்ந்து இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதனை சரி செய்ய தாமதமானதால் மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு வந்தே பாரத் ரயிலின் இன்ஜினில் அது பொருத்தப்பட்டு ஜங்சன் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து வழக்கம் போல் ரயில் இயக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சூறை காற்றுடன் மழை பெய்ததன் காரணமாக மின்பாதையில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்