திருச்சியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது கனமழை- பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு…!
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது.100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளான இன்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.வெயிலின் கொடுமையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.இந்தநிலையில் திருச்சி உட்பட 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, மாலை 6 மணி அளவில் வானில் கரு மேகங்கள் திரண்டன.பின்னர் இரவு 7 மணிக்கு மேல் திருச்சி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது.சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. அதனைப் பொதுமக்கள் எடுத்து மகிழ்ந்தனர்.திருச்சி உறையூர், தில்லை நகர், பாலக்கரை, பீமநகர்,மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், கே.கே.நகர், டிவிஎஸ் டோல்கேட், ஜங்ஷன் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக ஆழ்வார் தோப்பு உள்ளிட்ட சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் அப்பகுதிகளில் மின்சாரம் பல மணி நேரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
Comments are closed.