திருச்சி மீன் மார்க்கெட்டில் சுகாதார சீர்கேடு- மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? * பொதுமக்கள் எதிர்பார்ப்பு…!
திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், வாழை இலைகள், மங்களப் பொருட்கள், பூ வகைகள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். காந்தி மார்க்கெட்டின் பின்புறம் இறைச்சி கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு அசைவ பிரியர்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான மீன் வகைகள், கோழி, ஆடு இறைச்சி, முட்டை, கருவாடு போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இந்த இறைச்சி கடைகள் அமைந்துள்ள கட்டிடம் மிகவும் பழுதடைந்து இருந்ததால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டி கொடுத்துள்ளது. இந்த புதிய கட்டிடத்தின் கீழ்தளத்தில் மீன்கள் விற்பனை செய்ய 20 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேல் தளத்தில் சிக்கன், மட்டன் விற்பனை செய்ய கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மீன்கள் வெட்ட தனி இடமும், வாகனங்கள் நிறுத்த தனி இடமும் இதே கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மீன் மார்க்கெட் பகுதியின் பாதை குறுகலாக இருப்பதோடு, மீன் கடை உரிமையாளர்கள் தங்களது கடையின் முன்பே மீன்களை வெட்டி சுத்தம் செய்வதால் இடநெருக்கடி அதிகரித்துள்ளது. மார்க்கெட் உள்ளேயே 400 சதுர அடியில் மீன்களை சுத்தம் செய்வதற்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் வியாபாரிகள் அந்த இடத்தை பயன்படுத்தாமல் கடைகளின் முன்பு மீன்களை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர். இதனால், தினமும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், புதிய கட்டிடம் திறக்கப்பட்டபோது, மீன்களை பதப்படுத்த தனியாக குளிர்சாதன அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அறை பயன்பாட்டிற்கு வராததோடு, அதன் முன்னர் வெறும் பெயர்ப்பலகை மட்டுமே உள்ளது. அதற்கு அருகில், வாகன நிறுத்த பகுதி உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், கடை உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை மீன் மார்க்கெட்டின் உள்ளேயே நிறுத்துவதால், பரபரப்பான நேரங்களில் அதிக சிரமம் ஏற்படுகிறது. வார இறுதி நாட்களில், இந்த மார்க்கெட்டுக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வருகின்றனர். மொத்தம் 148 கடை கள் கொண்ட இந்த கட்டிடத்தில் தரைத்தளத்தில் உள்ள கட்டிடங்கள் மட்டுமே செயல்படுகின்றன.
ஆனால், முதல் மாடியில் எந்தக் கடைகளும் செயல்படாமல் காலியாக உள்ளது. இதனால், அங்கு சிலர் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் அந்த இடமே டாஸ்மாக் பார் போல காட்சி அளிக்கிறது சட்டவிரோத செயல்களுக்கான இடமாகவும் மாறி வருகிறது. இதற்கு மாற்றாக தரை தனத்தில் மீன் கடைகளும், முதல் மாடியில் கோழி மற்றும் மட்டன் கடைகளும் செயல்பட்டால் இரு தளங்களுக்கும் பொதுமக்கள் எளிதாக சென்று வர ஏதுவாக இருக்கும். இவ்வாறு பிரித்து அமைத்தால் வாடிக்கையாளர்கள் தேவைப்பட்டதை சரியான இடத்தில் தேர்வுசெய்து பெற முடியும் மற்றும் மார்க்கெட் முழுவதும் சுறுசுறுப்பாக இயங் கும். இது, வியாபாரி களுக்கும் நன்மையளிக்கும். இதனை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் இறைச்சிக் கழிவுகளால் இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் தொற்று நோய் பரவும் வாய்ப்பு ஏற்படும். ஆகவே திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மீன் மார்க்கெட்டை பார்வையிட்டு அங்கு சுகாதார வசதிகளை மேம்படுத்துவதோடு எஞ்சி உள்ள கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Comments are closed.