வணிகர் சங்கத்தினர் கோரிக்கை வைத்ததும் வால்மார்ட்டை இழுத்து மூடினார்:* டி- மார்ட்க்கு எதிராக திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசிய விக்கிரமராஜா…!
இந்திய சில்லறை வணிகத்தை பாதுகாத்திடவும், கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்தும், சில்லறை வணிகத்தை கபளீகரம் செய்யும் டி மார்ட் நிறுவனத்திற்கு எதிராக திருச்சியில் இன்று(30-08-2025) மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வி.கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார். இதில் மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா மற்றும் மண்டல தலைவர் எம்.தமிழ்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் வி.ஸ்ரீதர், மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி.கண்ணன், செயலாளர் வி.பி.ஆறுமுகப்பெருமாள், மாநிலத் துணைத் தலைவர்கள் ரங்கவிலாஸ் ரங்கநாதன், கே.எம்.எஸ்.ஹக்கிம், மாநில இணை செயலாளர்கள் டி.ராஜாங்கம், எம்.காதர்மைதீன், எம்.தீபக்ராஜா, தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு சங்க மாநில தலைவர் எஸ்.கந்தன், டோல்கேட் சுப்பிரமணி, திருப்பதி ஸ்டீல்ஸ் எம்.திருப்பதி, கே.ஜே.சுகந்திராஜா மற்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாவட்ட, மாநகர, நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு டி மார்ட் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேசுகையில்,
தமிழ்நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சில்லறை வணிகர்களின் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படுவதோடு அவர்கள் தொழிலே செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை வணிகர்கள் சந்தித்து தமிழ்நாட்டில் வால்மார்ட் வரக்கூடாது என கோரிக்கை வைத்தவுடன் அந்நிறுவனத்திற்கு ‘சீல்’ வைத்தார். தற்போது டி-மார்ட் பன்னாட்டு நிறுவனம் தனது கிளையை விரிவு படுத்திக் கொண்டே வருகிறது. திருச்சியில் ஏற்கனவே இரண்டு டிமார்ட் நிறுவனங்கள் உள்ள நிலையில் தற்போது திருச்சி, வயலூர் ரோடு, சோமரசம்பேட்டையில் மூன்றாவது கிளையை அமைத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான சில்லறை வியாபாரிகள் தங்களது பொருளாதாரத்தை இழக்க நேரிடும். இந்த நிறுவனத்தை இங்கு அமைக்க கூடாது. இதற்காகத்தான் வணிகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு உள்ளோம். டி மார்ட் நிறுவனத்தை இழுத்து மூட வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம். 2026 சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய வாக்கு வங்கி எந்த திசையை நோக்கி செல்லும் என்பதை திசை காட்டும் கருவியாக எங்களது ஆட்சி மன்ற குழு நிர்வாகத்தை கூட்டி அவர்கள் எந்த பக்கம் காட்டுகிறார்களோ அதை நோக்கி எங்களது வாக்குகள் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். விக்கிரமராஜாவின் மகன் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா சென்னை, விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏவாக உள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, அவரது தந்தை விக்ரமராஜா புகழ்ந்து பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.