Rock Fort Times
Online News

திருச்சியில் திருநங்கைகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பு:* சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்!

திருச்சியின் அடையாளம் என்று கருதப்படும் மலைக்கோட்டை பகுதியில் என்.எஸ்.பி.ரோடு, சின்ன கடைவீதி பெரிய கடை வீதி, சூப்பர் பஜார் போன்ற முக்கிய பகுதிகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் தான் பிரபல ஜவுளி கடைகள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள், பர்னிச்சர் கடைகள், மொபைல் ஷோரூம்கள், உணவகங்கள் என ஆயிரக்கணக்கான கடைகள் அமைந்துள்ளன. இதனால், என்.எஸ்.பி. சாலைக்கு உள்ளூர் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பொருட்கள் வாங்குவதற்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால் நாள்தோறும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த சாலைப் பகுதியில் தெப்பக்குளத்தை சுற்றி ஏராளமான தரைக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த கடைகள் சமீபத்தில் தான் அகற்றப்பட்டு விசாலமான சாலையாக காட்சி அளிக்கிறது. இந்தநிலையில் மக்கள் கூடும் கூட்டத்தை கவனத்தில் கொண்டு திருநங்கைகளில் சிலர் மலைக்கோட்டை முகப்பு வாசல் முதல் என்.எஸ்.பி.சாலை, சின்னக் கடை வீதி, பெரிய கடை வீதி போன்ற இடங்களில் நின்று கொண்டு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் தலையில் கை வைத்து பணம் கேட்கின்றனர். பணம் இல்லை என்று சொல்பவர்களை வசை பாடுகின்றனர்.

இதேபோல இரவு நேரங்களில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் முதல் சென்னை பைபாஸ் ரோடு, மத்திய பேருந்து நிலையம், பஞ்சப்பூர் பேருந்து நிலைய வெளிப்புற பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நின்று கொண்டு அந்த வழியாக வாகனங்களில் செல்லும் இளைஞர்களை நிறுத்தி ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று விடுகின்றனர். ஒரு சிலர் அவர்களிடம் உள்ள பணம் மற்றும் செல்போன்களை பறித்துக் கொள்கின்றனர். இதனால், இரவு நேரங்களில் அந்த இளைஞர்கள் என்ன செய்வது என்று தெரியாமலும், யாரிடமும் சொல்ல முடியாமலும் விழி பிதுங்கி நிற்கின்றனர். இந்த இடங்களில் எல்லாம் இரவு நேரங்களில் போலீசார் வாகனங்களில் ரோந்து வருகின்றனர். ஆனால் இதனை யாரும் கண்டு கொள்வதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. ஒட்டுமொத்த திருநங்கைகளும் இதுபோன்று நடந்து கொள்வதில்லை. அவர்களிலும் ச லர் மகளிர் சுய உதவி குழு மூலம் கடன் பெற்று கடைகள் நடத்துதல், உணவகங்கள் நடத்துதல் உள்ளிட்ட பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் கஷ்டப்பட்டு படித்து முன்னேறி அரசு பதவிகளிலும் உள்ளனர். இவ்வாறு அவர்களில் பலர் நல்ல நிலைமையில் இருக்கும்போது இது போன்ற ஒரு சில திருநங்கைகளால் அந்த இனத்திற்கே கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. திருச்சி சிட்டி கமிஷனராக காமினி ஐபிஎஸ் பதவி ஏற்றதிலிருந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்தவகையில் திருச்சி சிட்டி பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் திருநங்கைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்