விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று (18.09.2023 ) விநாயகர் கோவில்களிலும், வீடுகளிலும், போலீசார் அனுமதித்த இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மூன்றாம் நாள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை அமைதியாக கொண்டாடும் பொருட்டு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி ஐபிஎஸ் தலைமையில் திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். குறிப்பாக அரியமங்கலம் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

திருச்சி அரியமங்கலம் எஸ்ஐடி கல்லூரியில் தொடங்கி காமராஜர் நகர், ராஜவீதி, ரயில் நகர் உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக வந்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரைஸ்மில் பேருந்து நிறுத்தத்தில் கொடி அணிவகுப்பு நிறைவடைந்தது. இதில் மாநகர காவல் இணை ஆணையர் செல்வகுமார், பொன்மலை சரக காவல் உதவி ஆணையர் காமராஜ், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் திருவானந்தம், தயாளன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.