கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே அரசு பேருந்தும் – காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை பார்த்ததும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி பேருந்து அடியில் சிக்கிய காரை மீட்டனர். மேலும், விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கோவை மாவட்டம், குனியமுத்தூரைச் சேர்ந்த செல்வராஜ், அவரது மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கீழையூர் பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்மிட சென்றபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. காரை ஓட்டிய ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவரும் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றிய பிறகு போக்குவரத்தை சீர் செய்தனர்.

Comments are closed.