அரசு பள்ளி மாணவர்களிடம் குடும்ப பின்புலத்தை விசாரிக்க கோரிய அறிவிப்பாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி…!
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் குடும்ப பின்புல தகவல்களை சேகரிக்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பாணையை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த அமீர் ஆலம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். ‘மாணவர்களின் குடும்ப பின்புல தகவல்கள்’ என்ற பெயரில் மாணவர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளதா? தாய், தந்தை சிறையில் உள்ளனரா? அகதிகளா? என்பன போன்ற விவரங்களை சேகரிக்க முயற்சி நடக்கிறது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. குறிப்பிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த இந்த தகவல் சேகரிக்கப்படுவதாக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு கூறும் ‘சிறப்புக் கவனம்’ என்னவென்று குறிப்பிடப்படவில்லை. மாணவர்களின் தகவல்கள் உணர்வுபூர்வமானவை, அவற்றை சேகரிப்பது அவர்களின் உரிமையை பாதிக்கும் செயல். இதுபோன்ற பின்னணி உடைய மாணவர்களை இந்த நடவடிக்கை மனச்சோர்வுக்கு உள்ளாக்கும். தனியார் பள்ளிகளில் இதுபோன்று கேட்க துணிவு உள்ளதா? இது உச்சநீதிமன்ற கட்டுப்பாடுகளை மீறுவதாக உள்ளது எனக் கூறிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்ததோடு அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Comments are closed.