அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக இன்று (டிசம்பர் 22) சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் ஜாக்டோ–ஜியோ மற்றும் போட்டோ–ஜியோ சங்க நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தல், அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்புதல், 7-வது ஊதியக்குழுவின் நிலுவைத்தொகை வழங்கல், ஊதிய முரண்பாடுகளை சரிசெய்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதன் பின்னர், ஜாக்டோ–ஜியோ அமைப்பு, ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் துவங்கும் என அறிவித்தது. இது தொடர்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் மு. பாஸ்கரன் கூறியதாவது, “பேச்சுவார்த்தை ஒரு விளையாட்டு போல அமைந்தது. கடந்த 4 பேச்சுவார்த்தைகளில் கூறியதையே அமைச்சர்கள் மீண்டும் கூறியுள்ளனர். அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பேச்சுவார்த்தை ஏமாற்றத்தை அளித்துள்ளது. டிசம்பர் 27 அன்று மாவட்ட தலைநகரங்களில் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆயத்த மாநாடு நடைபெறும். ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிடப்பட்டு நடைமுறையில் அமையும்” என தெரிவித்தார்.

Comments are closed.