சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம்: திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்…!
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்தும், மருத்துவ ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரியும் திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் இன்று(14-11-2024) தங்களது பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநிலப் பொருளாளர் அருளீஸ்வரன் தலைமையில், திருச்சி இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) ஆகியோர் இணைந்து, கருப்புப் பட்டைகள் அணிந்து, நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் மருத்துவர்கள் சங்க மாநிலப் பொருளாளர் அருளீஸ்வரன் நிருபர்களிடம் கூறுகையில், மருத்துவர்களின் ஒத்துழையாமை போராட்டம் தொடரும். அரசிடம் இருந்து உறுதியான அறிவிப்பு வெளியாகும் வரை, திருச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவர்கள், ஆய்வு கூட்டங்கள் மற்றும் வெளிப்புற மருத்துவ முகாம்கள் செல்வதை தொடர்ந்து புறக்கணிப்போம். திருச்சியில் நாளை கூடும் செயற்குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
Comments are closed.