தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் உயரப்போகிறது என்ற தகவல் பொதுமக்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பஸ் கட்டண உயர்வு என்கின்ற செய்தி வலம் வருகிறது. குறிப்பாக மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகின்ற காரணத்தினால் அந்த கூட்டங்களின் அடிப்படையில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என்று எதிர்க்கட்சிகளும் அந்த தகவலை பரப்புகின்றனர். ஆனால், இந்த நேரத்தில் அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழகத்தில் அரசு பஸ் கட்டண உயர்வு என்பது இருக்காது. தனியார் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அதன் உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்றம் மக்களிடம் கருத்தை கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுரை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், பொதுமக்களிடம் பஸ் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இது அரசின் நிலைபாடு அல்ல; நீதிமன்றத்தில் அறிவுரையின்படி நடத்தப்படுகிறது. அரசை பொறுத்தவரையில் பொதுமக்கள் மீது இந்த சுமையை ஏற்றக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. கடந்த காலங்களில் டீசல் விலை உயர்ந்தபோது கூட பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதைபோல இன்று சர்வதேச சந்தையில் டீசல் விலை குறைந்து இருந்தாலும் மத்திய அரசு டீசல் விலையை குறைக்க முன்வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.