திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சாமிதுரை. பெயிண்டரான இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்த அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி இறந்த சாமி துரையின் மனைவி விமலா மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சாமித்துரை மனைவிக்கு ரூ.16.36 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த 2021 ம் ஆண்டு தீர்ப்பளித்தார். ஏறத்தாழ 2 வருடம் கடந்த பின்பும், அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து விமலா மீண்டும் நீதிமன்றத்தை நாடவே நீதிபதி கருணாநிதி விபத்தை ஏற்படுத்திய அரசு போக்குவரத்துக் கழக TN45 N 3903 என்ற எண் கொண்ட பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று காலை ஜங்ஷன் பேருந்து நிலையத்திலிருந்து இடத்தில் இருந்து தஞ்சை புறப்பட்ட பேருந்து ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டது.
