Rock Fort Times
Online News

மாற்றுத்திறனாளியை அவமதித்த அரசு பஸ் நடத்துனர் பணியிடை நீக்கம்…!

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மதுரையைச் சேர்ந்த சச்சின் சிவா. இவர் கடந்த 18ம் தேதி சென்னையில் இருந்து மதுரைக்கு வருவதற்காக இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான கழிப்பறை வசதியுடன் கூடிய பஸ்சில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது அந்த பஸ்சின் நடத்துனர் இந்த பஸ்சில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை என கூறி பஸ்சில் ஏறக்கூடாது என கூறியுள்ளார். அப்போது சச்சின் சிவா, இதுபோன்ற பஸ்களில் பயணிக்க அனுமதி உள்ளது என கூறினார். அதற்கு, நடத்துநர் சிவாவிடம் ‘முகத்தை உடைத்துவிடுவேன். எனக்கு எல்லாம் தெரியும்’ என கூறி மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மாற்றுத்திறனாளி சச்சின் சிவாவை பஸ்சில் ஏற்றாமல், அப்படியே விட்டுசென்றுள்ளார். மேலும் காவல்துறையினர் முன்பாகவே, ‘நீ மதுரைக்கு வா. பார்த்துக்கொள்ளலாம்’ என கூறி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துவிட்டு சென்றதாகவும் தெரிகிறது. இதனையடுத்து மற்றொரு பஸ்சில் மிகுந்த சிரமத்துடன் சச்சின் சிவா பயணித்துள்ளார். ஒரு இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கே இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் மற்ற மாற்று திறனாளிகள், பார்வையற்றோருக்கு என்ன மாதிரியான நிலை அரசு பஸ்சில் ஏற்படும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மேலும் நடத்துனர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சச்சின் சிவா கோரிக்கை விடுத்தார். இந்தநிலையில், சம்பந்தப்பட்ட நடத்துநனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்