முன்னணி நடிகரான கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில் அவரது கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தநிலையில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் மற்றும் திமுக தலைமையுடன் அவர் இணக்கமாக இருந்து வரும் நிலையில் அந்த கூட்டணியில் இணைந்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் தொடக்க நாளான பிப்.21-ம் தேதி கட்சித் தலைவர் கமல்ஹாசன் கொடியேற்றி வைத்து உரையாற்றவுள்ளார். இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், “தாய்மொழி தினத்தில் (பிப்.21) பிறந்த மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களவைத் தேர்தல் களத்தில் வெல்லும். வரலாறு அதைச் சொல்லும். நாடாளுமன்றத்தில் நம்மவர்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து திரும்பிய கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று(19-02-2024) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ” ‘தக் லைப்’ படத்தின் முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அதை முடித்துவிட்டு தமிழகம் திரும்பியுள்ளேன். இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன். மக்களவைத் தேர்தல் பணிகள் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. கூட்டணி குறித்த தகவல்களை 2 நாட்களில் சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.