த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, குறைந்தது10 சதவீதம் உள்ளிட்ட பணப்பயன்களை வழங்க கோரிக்கை வைக்கின்றனர். சுமார் 58 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஜி.ஒ.100 அடிப்படையில் பணியாளர்கள் ஏற்றுக்கொள்கின்ற வகையில் அரசு உத்தரவாதத்துடன் கூடிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். முத்தரப்பு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை மின்வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக முன்வைக்கின்றனர். இக்கோரிக்கைகள் சம்பந்தமாக பணியைப் புறக்கணித்த பிறகும் ஊழியர்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே தமிழக அரசு, தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும். மேலும் மின்விநியோகம் சரியாக நடைபெறவும், பணியாளர்கள் பணியை முறையாக மேற்கொள்ளவும், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.