பேங்க்காக்கிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட கஞ்சா- பயணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…!
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் சிலர் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பேங்க்காக்கிலிருந்து ஏர் ஏசியா விமானம் இன்று(01-03-2025) திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணி, தனது உடைமைக்குள் மறைத்து 1,663 கிராம் எடை கொண்ட கஞ்சாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பயணியிடம் கஞ்சாவை கொடுத்து அனுப்பியது யார்?, யாரிடம் கொடுக்கச் சொன்னார்கள்?, யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்கிறது என்று பிடிபட்ட பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments are closed.