திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள போதாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா. போதாவூர் ஊராட்சித் தலைவராக உள்ளார். இவரது மனைவி மலர்க்கொடி(40). இந்நிலையில் நேற்று அதே ஊரைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோர் கட்டை, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் முத்தையா வீட்டுக்குச் சென்றனர். அவரை வெளியே அழைத்து, உங்கள் வீட்டில் மறைத்து வைத்துள்ள இன்பராஜ் என்பவரை வெளியே விடாவிட்டால் கொலை செய்து விடுவதாக கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் முத்தையா மற்றும் அவரது மனைவி மலர்க்கொடி ஆகிய இருவரையும் தாக்கி, வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து, நாற்காலி, இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தினர். அக்கம் பக்கத்தினர் வந்து தடுத்தபோது, அவர்களையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். பின்னர், தாக்கப்பட்டதில் காயமடைந்த கணவன்- மனைவி இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மலர்கொடி அளித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் முகமது ஜாபர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிந்து தாயனூர் பகுதியைச் சேர்ந்த ஆர்.வீரமணி (26), வி. வினோத்குமார் (23), சி.ஈஸ்வர் (18), க. சூர்யா (19), பே.ராஜேஷ் (25), கீரிக்கல்மேட்டைச் சேர்ந்த மு. அண்ணாவி (27), ர. முத்துக்குமார் (26), தாயனூர் க. சின்னக்கருப்பன் (22) ஆகிய 8 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான தாயனூரைச் சேர்ந்த பி. தீச்செல்வம், சு. கமலேஷ், சு. ராஜேஷ், சு. நதியா, சு. லோகேஷ், வேலுமணி உள்ளிட்ட 6 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.