திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதல் சோமரசம்பேட்டை வரை தெரு நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி- மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?…!
திருச்சி மாநகர பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்று புத்தூர் நால் ரோட்டில் இருந்து வயலூர் செல்லும் சாலை. இந்த சாலை வழியாக நாள்தோறும் பிஷப் ஹீபர் கல்லூரிக்கு ஆயிரக்கணக்கான மாணவர்களும், வயலூர் முருகன் கோவிலுக்கு பக்தர்களும், அந்தப் பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்களும் சென்று வருகின்றனர். மேலும், இப் பகுதியில் அரசு அலுவலகங்களும், ஏராளமான வணிக நிறுவனங்களும் இருப்பதால் நாள்தோறும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். இதனால், இந்தச் சாலை எந்நேரமும் அதிக நெரிசலாக காணப்படும். இந்த சாலையில் குறிப்பாக பிஷப் ஹீபர் கல்லூரியில் இருந்து சோமரசம்பேட்டை வரை சாலையில் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்தத் தெரு நாய்கள் காலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள், வேலை முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அந்த வழியாக செல்பவர்களை துரத்தி, துரத்தி கடிக்க பாய்கின்றன. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்திக் கொண்டு நீண்ட தூரம் ஓடுகின்றன. இதனால், அவர்கள் வாகனத்தை வேகமாக இயக்கும்போது மற்ற வாகனத்தின் மீது மோதியோ அல்லது தடுமாறியோ கீழே விழுந்து ரத்த காயம் அடைகின்றனர். இந்நிலை தொடர்ந்து நீடித்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளது. நாய்கள் கடித்தால் “ரேபிஸ்” போன்ற கொடிய நோய்கள் வர வாய்ப்புள்ளதால் மேற்கண்ட சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த திருச்சி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.