திருச்சி-சென்னை பைபாஸ் ரோடு சஞ்சீவி நகர் பகுதியில் அடிக்கடி சாலை விபத்து:* மேம்பாலம் அமைக்கக் கோரி அ.ம.மு.க.சார்பில் ஆர்ப்பாட்டம்!
திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள சஞ்சீவி நகர் பகுதியில் நான்கு புறங்களில் இருந்து வாகனங்கள் வந்து செல்வதால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. மேலும் அரியமங்கலம், பனையக்குறிச்சி, சர்க்கார்பாளையம், வேங்கூர், கல்லணை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தங்களின் தேவைக்காக சஞ்சீவி நகர் பகுதியை கடந்து வருகின்றனர். சஞ்சீவி நகர் பகுதியில் அதிகளவு வாகனங்கள் கடந்து செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நேரிடுகின்றன. ஆகவே, சென்னை பைபாஸ் சாலையை கடந்து செல்ல சுரங்கப்பாதை அல்லது உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிகாரிகளிடமும் மனு அளிக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தப் பகுதியில் இன்று(13-11-2025) காலை ஏற்பட்ட சாலை விபத்தில் டிரைவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சஞ்சீவி நகர் சிக்னல் அருகே அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. இவ்விடத்தில் மேம்பாலம் அமைக்கக் கோரி, கடந்த ஜூன் மாதம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத, தேசிய நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து, இன்று பனையகுறிச்சி, சர்க்கார்பாளையம் உட்பட அனைத்து ஊர் பொதுமக்களுடன் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் சசிகுமார், வேங்கூர் மணிகண்டன், பனையக்குறிச்சி அன்பழகன், கண்ணன், கல்நாயக் சதீஷ்குமார், கல்லணை குணா ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Comments are closed.