Rock Fort Times
Online News

திருச்சி, திருவெறும்பூரில் மாணவர்களுக்காக காலை, மாலை நேரங்களில் கட்டணமில்லா பேருந்து வசதி …!* அமைச்சர்கள் சிவசங்கர், அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தனர்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் ( லிட் )திருச்சி மண்டலம் சார்பில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் நலன்கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டணமில்லா நகர சிறப்பு பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (4-12-2025) அண்ணா நகர், திருவெறும்பூர் பேருந்து நிலையம், காட்டூர் பேருந்து நிலையம், பால்பண்ணை நால்ரோடு பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் நான்கு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன், மாநகராட்சி மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன், பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், சிவக்குமார், ஏ. எம்.ஜி.விஜயகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில்,
பள்ளி மாணவர்களுக்கு தேவையான பேருந்து வசதி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களால் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப பேருந்து வசதிகளை செய்து கொடுத்து வருகிறோம். பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடர்ந்து கோரிக்கை வைத்தார். அதற்கான ஆய்வுகள் செய்யப்பட்டு கடந்த மாதம் சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான பிரத்தியேக பேருந்து சேவை தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் இன்று திருவெறும்பூர் தொகுதியில் இந்த சேவை தொடங்கப்படுகிறது. இந்தப் பேருந்துகள் காலையில் பள்ளி நேரத்தில் மாணவர்களை அழைத்துச் செல்லும். மாலை பள்ளி முடிந்த பின்பு மீண்டும் அழைத்து வரும். மற்ற நேரங்களில் வழக்கமான நடைகளில் இயக்கப்படும். தொடர்ந்து இது ஆய்வு செய்யப்பட்டு ஒவ்வொரு தொகுதியாக விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்