Rock Fort Times
Online News

பிரணவ் ஜூவல்லர்ஸில் இதுவரை ரூ.49 கோடி மோசடி; 1,234 பேர் புகார்….

திருச்சி, மதுரை, சென்னை, கோவை, ஈரோடு, நாகர்கோவில், கும்பகோணம், புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் பிரணவ் ஜுவல்லரி செயல்பட்டு வந்தது. இதன் இயக்குநர்களாக திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா இருந்து வந்தனர். இந்த நகை கடை  விளம்பர துாதுவா்களாக நடிகைகள் ராதிகா, சைத்ரா ரெட்டி மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோா்  உள்ளனா். இக்கடையில் நகை சீட்டு போட்டால் 12 மாதத்திற்கு 9 சதவீத போனஸ் மற்றும் வாங்கும் நகைகளுக்கு 9 முதல் 12 மாதங்களுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்க ப்பட்டது. இதனை நம்பிய அப்பாவி பொதுமக்கள் பலரும் பிரணவ் ஜூவல்லரி நகை சீட்டில் சேர்ந்தனர். இந்த நிலையில் நகை சீட்டில் சேர்ந்த சிலர் அதற்குரிய காலம் முடிவடைந்ததால் நகையை வாங்க கடைக்கு சென்றனர். ஆனால் அவர்களுக்கு நகையை வழங்காமல் கடை ஊழியர்கள் அலைக்கழித்து வந்தனர். இதனால் நகை சீட்டு  கட்டிய வாடிக்கையாளர்கள் நகைக்கடையை முற்றுகையிட்டனர். இதுகுறித்து புகார் அளிக்குமாறு போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் 500க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். இந்நிலையில் நகைக்கடைகளை பூட்டிவிட்டு அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர். பொதுமக்களின் புகார்களின் அடிப்படையில் அந்த நகைக்கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சிறிய நகைகள் மட்டுமே இருந்தன. பெரும்பாலான நகைகளை எடுத்துச் சென்று விட்டது தெரிய வந்தது. அந்த நகைக்கடையின் திருச்சி கிளை மேலாளர் நாராயணன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு வெறும் ஐம்பதாயிரம் மட்டுமே இருந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 1,234 பேர் தங்களை பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தினர் ஏமாற்றி விட்டதாக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்துள்ளனர். அந்த புகார்களின் அடிப்படையில் பார்த்தால் இதுவரை ரூ.49 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக தெரிய வருகிறது. நகைக்கடை மேலாளர் நாராயணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மதன், கார்த்திகாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த நகைக்கடையின் விளம்பர துாதுவா் நடிகா் பிரகாஷ்ராஜிற்கு அமலாக்கத்துறையினா் சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடதக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்