விநாயகர் கோவில் கட்டுவதற்காக 3 சென்ட் இடம், ரூ.3 லட்சம் வழங்கிய திருப்பூரைச் சேர்ந்த இஸ்லாமியருக்கு கோட்டை அமீர் விருது…!
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று(26-01-2026) உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இன்று விழா நடைபெற்றது. காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றினார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயர்நீத்த கோட்டை அமீர் பெயரால் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலிமுல்லாவிற்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்படுகிறது. காங்கேயம் வட்டம், கணபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கலிமுல்லா தனக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை விநாயகர் கோவில் கட்டுவதற்காக தானமாக வழங்கியுள்ளார். மேலும், கோவில் கட்டுவதற்காக ரூ.3 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். 60-க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் செய்துள்ளார். இவரை பாராட்டி கவுரவிக்கும் வகையில் கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த விருதைப் பெற்ற அவருக்கு 5 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Comments are closed.