திருச்சி திமுகவின் கொடி காத்த குமரன் என்றழைக்கப்பட்ட முன்னாள் நகர செயலாளர் கே.கே.எம்.தங்கராஜா காலமானார்..!
திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒருங்கிணைந்த திருச்சி நகர கழக செயலாளர், மாவட்ட ஆவின் சேர்மன், தலைமை செயற்குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர் கேகேஎம் தங்கராஜா. இவர் இன்று (01-06-2025) மதியம் காலமானார். திருச்சியில் திமுகவை வளர்த்த முக்கிய நிர்வாகிகளில் கேகேஎம் தங்கராஜா முக்கியமானவர். கலைஞர் மு.கருணாநிதி மீது அளப்பரிய அன்பு கொண்டவர். கலைஞரின் முரட்டு பக்தர் என்றுகூட இவரை சொல்லலாம். இவர் நகர கழக செயலாளராக பதவி வகித்த காலக்கட்டத்தில், ஜீப்பின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு மாநகர பகுதிகளை சுற்றி சுழன்று வந்து கட்சி பணியாற்றுவது, கழக நிர்வாகிகளை சந்திப்பதே தனி அழகு தான். 1993ம் ஆண்டு வைகோ திமுகவிலிருந்து பிரிந்து சென்று தனி கட்சி ஆரம்பித்த போது மதிமுக கொடி ஏற்றுவதற்காக பெரியமிளகு பாறை பகுதிக்கு வந்தார். பெரிய மிளகுபாறை பகுதி கேகேஎம் தங்கராஜா ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்பதால் வைகோவை கொடி ஏற்றவிடவில்லை. படு பயங்கர கலவரம் உருவானது. கொடியேற்ற வந்த வைகோ ஆதரவாளர்களை ஓட, ஓட விரட்டினார். இதனால், இவர் திமுகவின் கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்பட்டார். இவரது அயராத கட்சிப் பணிகளை பார்த்த கலைஞர் கருணாநிதி 1996 இல் திமுக ஆட்சிக்கு வந்த போது இவருக்கு திருச்சி மாவட்ட ஆவின் சேர்மன் பதவியை கொடுத்து அழகு பார்த்தார். இந்த பதவியில் அவர் 1996 முதல் 2001 வரை திறம்பட செயல்பட்டார். இவ்வாறு பல்வேறு நிலைகளில் சிறப்பாக செயல்பட்ட கே கே எம் தங்கராஜா இன்று ( 01-06-2025 ) ஞாயிற்றுக்கிழமை மதியம் காலமானார். அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள், நண்பர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அவரது இறுதி ஊர்வலம் நாளை (ஜூன் 2) மாலை 3 மணி அளவில் திருச்சி, பெரிய மிளகு பாறையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.