Rock Fort Times
Online News

தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக கட்சி நிர்வாகிகளுக்கு QR குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை: த.வெ.க.அசத்தல்…!

தமிழக அரசியல் வரலாற்றில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் தவிர்க்க முடியாத ஒரு கட்சியாக உருவெடுத்துள்ளது. அவரிடம் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் படை அவருக்கு பக்க பலமாக இருக்கிறார்கள். இதனால் அவர் செல்கிற இடங்களில் எல்லாம் இளைஞர்கள் பெருமளவில் திரண்டு விடுகிறார்கள். இதுவரை இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய், மக்கள் சந்திப்பு என்கிற பெயரில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து உரையாற்றி வந்தார். ஆனால், கரூர் சம்பவத்திற்கு பிறகு சற்று தொய்வு ஏற்பட்டது. இது சம்பந்தமான
வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருவதால் விஜய் மீண்டும் அரசியல் களத்தில் பிஸியாகி இருக்கிறார். அண்மையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார். இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ளதால் விஜய் அரசியல் பணிகளில் விறுவிறுப்பு காட்டி வருகிறார். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை பல்வேறு கட்டங்களாக சுமார் 3 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முதல்கட்டமாக தற்போது 106 கழக மாவட்டங்களுக்குட்பட்ட 214 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஆயிரத்து 280 நகர, ஒன்றிய, பேரூர் கழகங்கள் மற்றும் அதைசார்ந்த 21 ஆயிரத்து 134 கிளை மற்றும் வார்டு கழகங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள் 1 லட்சத்து 2 ஆயிரத்து 103 பேருக்கு QR குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அட்டைகள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அறிவுறுத்தலின் பேரில் அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் வரலாற்றிலேயே கழக நிர்வாகிகளுக்கு முதன்முறையாக QR குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கிய முதல் கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்