தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருகிற ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற்று மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. வாக்குப்பதிவிற்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க – அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் என்.ஆர் காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், பா.ஜ.கவுக்கு 10 தொகுதிகளும், அதிமுகவுக்கு 2 தொகுதிகளும், லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 201-ம் ஆண்டு என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு அதிமுக உதவியாக இருந்த சூழலில், தற்போது நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வெறும் 2 தொகுதிகள் ஒதுக்கியிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று (21-03-2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியோடு, சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள அதிமுக, உப்பளம், உருளையன்பேட்டை ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சியில் அமரும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதியில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த தேர்தலில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறோம். இரண்டிலும் வெற்றி பெறுவோம். பல்வேறு கால சூழ்நிலைகளால் குறைந்த எண்ணிக்கையில் அதிமுக போட்டியிடக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. கூட்டணி தர்மத்தை கடைபிடித்து எடப்பாடி பழனிசாமியின் அனுமதியோடு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று கூறினார்.

Comments are closed.