காப்பீடு தொகையை கொடுக்காமல் மோசடி செய்த பிரபல தனியார் நிதி நிறுவனத்திற்கு அபராதம்…* திருச்சி நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !
திருச்சி, சந்துக்கடை பகுதியை சேர்ந்த சிவக்குமார் – சுப்புலெட்சுமி தம்பதியினர் கடந்த 31.12.2021-ம் தேதியன்று எல் அண்ட் டி பைனான்ஸ் லிமிடெட் என்னும் பிரபல தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.96,519-யை கடனாக பெற்றுள்ளனர். அந்த நிறுவனம் அவர்களிடம் கடன் வழங்கும்போது மேற்படி கடனுக்காக கட்டாயப்படுத்தி காப்பீடு தொகையாக ரூ.5,380-யை வசூலித்துள்ளனர். இந்நிலையில் சிவக்குமார் – சுப்புலெட்சுமி தம்பதியினர் மேற்கண்ட கடனை எவ்வித நிலுவையும் இன்றி தவணை முறையில் செலுத்தி வந்த நிலையில் கடந்த 09.03.2024ம் தேதியன்றி சிவக்குமார் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார். சுப்புலெட்சுமி மேற்கண்ட கடனுக்காக காப்பீடு செய்துள்ளதால் அதனை பெற்றுக்கொடுக்கும் எல் அண்ட் டி நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டு வந்த நிலையில் அந்நிறுவனம் சரியான பதில் கூறாமல் சுப்புலெட்சுமியை அலைக்கழித்து வந்ததோடு, இருவேறு காப்பீடு நிறுவனங்களின் பெயரில் ஆவணங்களை போலியாக உண்டாக்கி சுப்புலெட்சுமியிடம் கொடுத்து மோசடி செய்து வந்ததோடு, கடனை திரும்ப செலுத்த சொல்லி தொந்தரவும் செய்து வந்துள்ளது. இதனால் சுப்புலெட்சுமி திருச்சி, பாலக்கரையை சேர்ந்த வழக்கறிஞர் இ.ஜார்ஜ் கெவின் என்பவர் மூலமாக திருச்சிராப்பள்ளி மாவட்ட நுகர்வோர் குறைதீர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நேற்று(06-03-2026) தீர்ப்பளிக்கப்பட்டது. எல் அண்ட் டி நிதி நிறுவனம் நேர்மையற்ற முறையில் செயல்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் புகார்தாரரான சுப்புலெட்சுமிக்கு மேற்படி கடனை தள்ளுபடி செய்து என்.ஓ.சி. வழங்கவும், புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் மனவேதனைக்கு ரூ.50,000-மும், வழக்கு செலவு தொகை ரூ.10,000-மும் 45 நாட்களுக்குள் வழங்க தீர்ப்பாயத்தின் தலைவர் டி.சேகர், உறுப்பினர் ஜே.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

Comments are closed.