திருச்சி கேம்பியன் பள்ளியில் கலை இலக்கிய திருவிழா- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு திரைப்பட இயக்குனர் பிரான்சிஸ் மார்க்கஸ் பரிசு வழங்கி பாராட்டு…!
மாணவர்களின் பன்முக திறன்களை வெளி கொணரும் வகையில் திருச்சி கேம்பியன் ஆங்கிலோ- இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுதோறும் கேம்போ ஃபெஸ் என்னும் கலை இலக்கியத் திருவிழா நடந்து வருகிறது. அந்த வகையில் 2024- 25 ஆம் கல்வி ஆண்டிற்கான கலை இலக்கியத் திருவிழா அக்டோபர் 19-ம் தேதி அன்று பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ் தலைமை வகித்தார். கலைக்காவிரி நுண்கலை கல்லூரியின் இணை பேராசிரியர் வெங்கடலட்சுமி தொடக்க விழாவிற்கான சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம். அனைத்து துறைகளிலும் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணர கேம்போ ஃபெஸ் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது என கூறினார். கலை இலக்கிய திருவிழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு தமிழ் பேச்சுப்போட்டி, குழு பாடல் போட்டி, முக ஓவியம், காய்கறியில் கலை நயம் படைத்தல், தனிநபர் நடன போட்டி, பேனா முனையில், தமிழோடு விளையாடு, வண்ண கோலம், ஒரு ஊர்ல, ஃபர்ஸ்ட் லுக், மிஸ்டர் அண்ட் மிஸ் கேம்போ பெஸ் -24 போன்ற போட்டிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
இதில், சேவியர் அணியினர் 262 புள்ளிகளை பெற்று முதல் இடத்தையும், பிரிட்டோ அணியினர் 250 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றனர். மிஸ்டர் கேம்போ ஃபெஸ்- 24 பட்டத்தை அப்பலோ கேப்ரியலும், மிஸ் கேம்போ ஃபெஸ் பட்டத்தை ஹீனா பர்வீனும் வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் முன்னாள் மாணவரும், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மார்க் ஸ்டுடியோ பிரான்சிஸ் மார்க்கஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தானும் கேம்போ ஃபெஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகள் பெற்று கலைத்திறனை வளர்த்துக் கொண்டதாலும், கேம்பியன் பள்ளியில் பயின்ற கல்வியும் தன்னை இந்த இடத்திற்கு உயர்த்தி உள்ளது. மாணவர்கள் தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் மேலும் முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ், துணை முதல்வர் அருட்சகோதரர் பன்னீர்செல்வம் மற்றும் அருட் சகோதரர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
Comments are closed.