Rock Fort Times
Online News

ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கட்டணத்தில் பாஸ்டேக்: நான்கு நாட்களில் 5 லட்சம் பேர் பதிவு… தமிழ்நாடு முதலிடம்…!

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தனியார் வாகனங்கள் ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்தி வாங்க கூடிய பாஸ்டேக் பாஸ் திட்டம் கடந்த 15-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடியை ஓராண்டு அல்லது 200 முறை கடந்து செல்ல முடியும்.
இந்த நிலையில், கடந்த 4 நாட்களில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் இந்த பயண அட்டையை பெறுவதற்காக பதிவு செய்து கொண்டுள்ளனர். அதிக எண்ணிக்கையில் வருடாந்திர பாஸ் வாங்கப்பட்ட பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, கர்நாடகா, ஆந்திரா, அரியானா மாநிலங்கள் உள்ளன. பாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் நாளான ஆகஸ்ட் 15-ந்தேதி மாலை 7 மணி நிலவரப்படி 1.4 லட்சம் பயனாளர்கள் இந்த வருடாந்திர பாஸை வாங்கி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். சுங்கச்சாவடிகளில் சுமார் 1.39 லட்சம் பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. பாஸ்டேக் வருடாந்திர பாஸை வாங்கி செயல்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ தளமான ராஜ்மார்க்யாத்ரா செயலி கூகுள் பிளே ஸ்டோரில் முதலிடத்தில் உள்ள அரசு செயலியாக மாறியுள்ளது. ஒட்டுமொத்தமாக 23-வது இடத்திலும், பயணப் பிரிவில் 2-வது இடத்திலும் உள்ளது. 15 லட்சத்துக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டு 4.5 நட்சத்திர மதிப்பீட்டை இந்த செயலி பெற்றுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய தரவுகளின்படி ஒரே நேரத்தில் சுமார் 20,000 முதல் 25,000 பேர் வரை ராஜ்மார்க்யாத்ரா செயலியை பயன்படுத்துகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 1,150 சுங்கச்சாவடிகளில் இந்த பாஸ்டேக் வருடாந்திர பாஸை பயன்படுத்தி தனியார் வாகனங்கள் தடையின்றி பயணிக்கலாம்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்