Rock Fort Times
Online News

திருச்சியில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தேர்தல் வாக்குறுதி படி விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்காததை கண்டித்து மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு தொகை தருவதாக கூறி வழங்காத மத்திய அரசை கண்டித்து பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக 120 விவசாயிகள் வாரணாசி புறப்பட்டனர். அவர்களை செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் தமிழக போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து இன்று(22-05-2024) சென்னை சாஸ்திரி பவன் மற்றும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார். அதற்காக இன்று பல்லவன் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை புறப்பட விவசாயிகள் தயாரானார்கள். இதையடுத்து அய்யாக்கண்ணு மற்றும் மாநில துணைத்தலைவர் மேகராஜன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்களை உறையூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதனை அறிந்த சக விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், கைது செய்த விவசாயிகளை விடுவிக்க கோரியும் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள மருத்துவமனை எதிரே உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் திருச்சி உறையூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்