திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் தங்கி இருப்பதாக கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசாா் தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் இலங்கை யாழ்ப்பாணம் புன்னாலை கட்டுவான் சுண்ணாகம் பகுதியைச் சேர்ந்த சாதுசன் (24) என்பது தெரியவந்தது. இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இலங்கை பாஸ்போர்ட் மூலமாக தமிழகம் வந்துள்ளார். பின்னர் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. போலி ஆதார் கார்டு மூலமாக இந்த பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார். இந்த பாஸ்போர்ட் பெங்களூரில் இருக்கும் சேவியர் என்பவரிடம் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சாதுசன் மற்றும் அவருக்கு பாஸ்போர்ட் எடுக்க உதவி செய்த சென்னை சதானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோயல் புகழேந்தி (54) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து இலங்கை பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர்.
மேலும் இந்த போலி பாஸ்போர்ட் பெறுவதற்கு ராஜன், சிவரஞ்சன், ஸ்டான்லி கிறிஸ்துபர் ஆகிய 3 பேர் உதவி செய்ததும் தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இலங்கையைச் சேர்ந்த சுகந்தினி, நாதுசன், சதீஷ் ஆகிய 3 பேருக்கு இந்த கும்பல் போலி பாஸ்போர்ட் எடுத்து கொடுத்திருப்பதும் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் சிவரஞ்சன், ஸ்டான்லி கிறிஸ்டோபர், ராஜன், சுகந்தினி, நுாதுசன் , சதீஷ் மற்றும் சாமி என்கிற வைத்தியநாதன் ஆகியோரை காவல்துறையினா் வலைவீசி தேடி வருகின்றனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.