ரோட்டரி சங்கங்களின் உதவியால் ரூ.45 லட்சம் மதிப்பில் திருச்சியில் கண் வங்கி… ஜோசப் கண் மருத்துவமனையில் தொடக்கம்!
இத்தாலி நாட்டிலுள்ள ரோட்டரி கிளப் ஆஃப் அபுஜா ஐ.எஸ்.ஓ கல்ஃப், ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் ரோட்டரி சங்கத்தின் மேஜர் டோனரான திருச்சியை சேர்ந்த ஏ.கே.எஸ்.சீனிவாசன் ஆகியோரின் பங்களிப்பில் சுமார் ரூ.45 லட்சம் மதிப்பிலான கண் வங்கி திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கண் வங்கியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை ஜோசப் கண் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி சுபா பிரபு வரவேற்றார். இந்நிகழ்வில் டி.இ.எல்.சி. திருச்சபையின் பிஷப் ஏ.கிறிஸ்டியன் சாம்ராஜ், செயலாளர் தங்கப்பழம், பொருளாளர் ஞானபிரகாசம், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர்கள் ஜே.கார்த்திக், ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கண் வங்கி குறித்து ரோட்டரி கிளப் இன்டர்நேஷனல் இயக்குனர் ட்ரிபிள்.எம் முருகானந்தம் தெரிவித்ததாவது.,
ரோட்டரி சங்கங்களின் மூலம் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த மக்களின் சமூகப் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் பல்வேறு சேவைகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் கண் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2022- 23ம் ஆண்டில் ரோட்டரி சங்கங்கள் ஜோசப் கண் மருத்துவமனையுடன் இணைந்து சுமார் 50 ஆயிரம் பேருக்கு மேல் கண் மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளோம். ஜோசப் கண் மருத்துவமனையுடன் ரோட்டரி சங்கங்கள் இணைந்து எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் அது முழுவதுமாக மக்களுக்கு சென்றடைகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தற்போது சுமார் 45 லட்சம் மதிப்பிலான கண் வங்கி இங்கு தொடங்கப்பட்டுள்ளது. இது திருச்சி மட்டுமல்லது பல்வேறு அருகில் இருக்கும் மாவட்டங்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம். ஒருவர் கண் தானம் அளிப்பதன் மூலம் இருவருக்கு வாழ்வளிக்க முடியும். பல நவீன கருவிகள் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த கண் வங்கியில் ஒருவரிடம் தானமாக பெறப்பட்ட கண்ணை பாதுகாப்பது, கண் பரிசோதனை செய்து தேவைப்படும்போது தானம் அளிப்பது என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ரூ 35 லட்சம் மதிப்பிலான சிறப்பு கருவி ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரோட்டரி நிர்வாகியான எம்.ஏ.முகமது தாஜ் பேருதவியாக இருந்தார். இந்த கண் வங்கியின் மூலம் ஏராளமானவர்கள் வாழ்க்கையில் ஒளியையும், நம்பிக்கையும் கொண்டுவர முடியும். இதன் முதல்படியாக நான் எனது கண்களை தானமளிக்க உறுதியளிக்கிறேன்.ஆகவே நீங்களும் இருக்கும் போது இரத்த தானமும், இறந்த பின் கண் தானமும் செய்யுங்கள் என்றார். இந்நிகழ்வில் ரொட்டேரியன்கள் லியோ பெலிக்ஸ், லூயிஸ் ராஜா, முன்னாள் மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, கண்ணன், சத்திய நாராயணன், ஹனிபா பி.ஷானவாஸ், ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரதீபா, அகிலன் மற்றும் நிர்வாகிகள் ஊழியர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.