மகளிருக்கு ரூ.50,000 கொடுத்தாலும் சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்பது உறுதி…- எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து…!
தமிழகத்தில் உள்ள 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என இன்று(பிப்.13) காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் தோல்வி பயம், முதல்-அமைச்சரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? 28 மாதங்களாக ‘1000 ரூபாய் கொடுக்காமல் இழுத்தடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து ‘கோடைக்கால சிறப்புத் தொகை’ கொடுக்கிறாராம். 2024, 2025-ம் ஆண்டுகளில் நமக்கு கோடை காலமே வரவில்லையா?. செப்டம்பர் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ.34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே “ரூ.3,50,000”. இதை வீடு வீடாக சென்று அ.தி.மு.க. அம்பலப்படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு? இப்போது ‘மாதம் 2000 ரூபாய்’ என்று நான் அளித்த அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில் இந்த அறிவிப்பு வெளியில் வந்திருக்கிறது இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன்:
மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதால் சட்டமன்றத் தேர்தலில் திமுக தோற்றுப் போகும் என்ற பதற்றத்தில் இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்:
அதிமுகவின் குலவிளக்கு திட்டத்தால் மகளிரிடம் ஆதரவு பெருகியதால் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. கோடி கோடியாக கூட்டி கொடுத்தாலும் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்று தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:
மகளிர் உரிமை தொகை ஐந்தாயிரம் ரூபாய் வரவு வைத்து இருப்பது தேர்தல் மாயை என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:
தமிழ்நாட்டில் மகளிருக்கு ரூ.5,000 மட்டுமில்லை, ரூ.50,000 ஆயிரம் கொடுத்தாலும் திமுக தோல்வியடையப் போவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.