தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம டைந்துள்ளது. கோவையில் மழை வெளுத்து வாங்குகிறது. அதுபோல சென்னையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்சியிலும் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென அந்தந்த மாவட்டங்களுக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சரின் உத்தரவின்பேரிலும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின் படியும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம், பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் கூறுகையில், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பாதைகளை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறோம். அம்மன் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் சற்று தேங்கி செல்கிறது. அந்தப் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் செல்ல ஏதுவாக ராஜராஜன் நகர் பகுதி முதல் கிராப்பட்டி அன்பு நகர் வரை தூர்வாரப்பட்டுள்ளது.
பழுதடைந்த சாலைகளை சீர் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காற்று, மழையின் காரணமாக சாலைகளில் மரங்கள் விழுந்தால் அதனை அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கிய இடங்களில் அதனை அப்புறப்படுத்தவும், கொசு மருந்து அடிக்கவும் ஊழியர்கள் தயாராக உள்ளனர். குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை அருகில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கும், அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். அதிகளவு தண்ணீர் தேங்கும் பகுதிகள் என கண்டறியப்பட்ட டோபி காலனி , ராஜீவ்காந்தி நகர் , ஆதிநகர் , பாத்திமா நகர் , ஏயுடி நகர் , கிருஷ்ணாபுரம் , ஆர்எம்எஸ் காலனி, கோரை ஆறு, சொசைட்டி காலனி, துளசிங்க நகர் ஆகிய இடங்களில் பெரிய வாய்க்கால் பகுதிலிருந்து தண்ணீர் வராமல் தடுக்க புதிதாக ஷட்டர் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீரை உடனடியாக அகற்ற 20 எச்பி டீசல் மோட்டார் கொண்ட பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட்டு உள்ளன. லாரன்ஸ் சாலை, ஐயப்பன் கோவில் அருகில் மழை நீர் அதிகமாக தேங்குவதை உடனடியாக வடிய வைப்பதற்காக வடிகால் வாய்க்காலில் மழை நீரை உறிஞ்சி வெளியேற்றுவதற்கு மோட்டார் ரூம் அமைப்பதற்கு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன் என தெரிவித்தார்.
Comments are closed.