Rock Fort Times
Online News

போதும்…போதும்… இனி இந்த அரசியலே எனக்கு வேண்டாம்… அதிமுக முன்னாள் எம்எல்ஏ அதிரடி முடிவு…!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான வைத்திலிங்கம் நேற்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.வில் இணைந்தார். அவரைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ராமச்சந்திரனும் தி.மு.க.வில் இணையப் போவதாக கூறப்பட்டது. இந்தநிலையில், அவர் இன்று(22-01-2026) அரசியல் பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று காலை வீடியோ பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், நேற்றைய தினம் திமுகவில் இணையப்போவதாக கூறினேன். அதற்கு ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். என்னை பெற்றெடுத்த தாய், வீட்டில் உள்ள ஜெயலலிதா படத்தை என்ன செய்வாய்? என்று கேட்டார். என்னுடைய மகளோ, இது அசிங்கமாக இல்லையாப்பா என்று கேட்டாள். இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை. அதனால், பொதுவாழ்வில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். உடல்நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுக்கிறேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் இனி பயணிக்கப் போவதில்லை. அண்ணன் வைத்திலிங்கம், தொண்டர்கள் என்னை மன்னிக்கவும். தொண்டர்கள் அனைவரும் அவர்கள் விரும்பிய இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்