Rock Fort Times
Online News

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் இரண்டாவது நாளாக நீடிக்கும் அமலாக்கத்துறை சோதனை…!

தமிழகத்தில் 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம்.  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரான இவர், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு  சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  இவர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த போது சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த குற்றச்சாட்டை விசாரித்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அன்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் பிரைவெட் லிமிடெட் நிறுவன இயக்குநர் கே.ஆர்.ரமேஷ், வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு, உறவினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதேபோன்று, வைத்திலிங்கம், அவரது மூத்த மகன் பிரபு ஆகியோர் மீது 1,057.85 சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தஞ்சாவூர் ஊழல் தடுப்புப் பிரிவினர் மற்றொரு வழக்கைப் பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருந்ததால், அதுகுறித்து விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு ஊழல் தடுப்புப் பிரிவு அண்மையில் பரிந்துரை செய்ததன் அடிப்படையில்,  நேற்று புதன்கிழமை அதிகாலை வைத்திலிங்கத்தின் வீடு, சென்னை எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறை, மகன்களின் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.  இந்நிலையில் இரண்டாவது நாளாக 6 இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றன.  இந்த சோதனையின் போது, வைத்திலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட நகை, பணம், ஆவணம் குறித்த விவரங்கள் தெரியவரும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்