திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி என்ற நகைக்கடை செயல்பட்டு வந்தது. இதன் இயக்குநர்களாக திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா இருந்து வந்தனர். குறிப்பாக இந்நிறுவனம் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2 சதவீதம் வட்டி வழங்கப்படும் எனவும் அப்படியில்லை என்றால் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்க நகைகளை 10 மாதங்கள் கழித்துப் பெறலாம் என்றும் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்த நிலையில், கடந்த மாதம் பிரணவ் ஜுவல்லர்ஸின் அனைத்து நகைகடகடைகளும் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதுடன், அதன் உரிமையாளர்களும் தலைமறைவாகினர். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரணவ் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு 100 சவரன் தங்க நகைகள் மற்றும் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக பிரணவ் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகாவிற்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இந்நிறுவனம் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று தமிழகம் முழுவதும் பிரணவ் ஜூவல்லர்ஸ் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையில் கணக்கில் வராத சுமார் 24 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 11.60 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில் இந்நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும்
மோசடி செய்த பணத்தில் போலி நிறுவனங்களில் முதலீடு செய்து கணக்கு காட்டி இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.