காலி மது பாட்டில்களை 10 ரூபாய்க்கு திரும்பப்பெறும் விவகாரம்: திருச்சியில் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்….!
திருச்சியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை 10 ரூபாய்க்கு திரும்பப்பெறும் திட்டம் நாளை (25- 11- 2025) முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டம் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஏற்கனவே அமலில் உள்ளது. சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு காலி மது பாட்டில்களை வீசி செல்வதால் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் பாதிக்கப்படுகிறது. எனவே ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் காலி மது பாட்டில்களை திரும்ப பெற்று வருகின்றனர். ஆனால், திருச்சி மாவட்டத்தில் இதனை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தில் உள்ள 159 டாஸ்மாக் கடைகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று காலை திருச்சி பழைய ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் டாஸ்மாக் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுற்றுலாத்தலங்களில் வனவிலங்குகள் பாதிக்கப்படுகிறது என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் Poc மற்றும் ஸ்கேனர்கள் பயன்படுத்துவதில்லை. நாங்கள் இவற்றை பயன்படுத்தி வருகிறோம். ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறையால் அதிக பணிச்சுமையோடு வேலை பார்த்து வருகிறோம். இது, கூடுதல் சுமையை ஏற்படுத்தும். தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவதை, அரசு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. எனவே தனியார் நிறுவனத்திலிருந்து ஆட்கள் வந்து பெற்றுக் கொள்ளும்படி ஏற்பாடு செய்ய வேண்டும். இதனை அரசு ஏற்க தவறினால் தொடர்ந்து அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Comments are closed.