திருச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது…!
திருச்சி மாவட்டம், செங்குறிச்சியைச சேர்ந்த பிரவின்குமார் என்பவர் கட்டிடங்களுக்கு மின் வயரிங் பணி செய்து வருகிறார். இவர் மணிகண்டம், மேக்குடி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் கட்டி வரும் வீட்டுக்கு தற்காலிக மின் இணைப்பு வேண்டி மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் வணிக ஆய்வாளர் அருளானந்தம் என்பவரை அணுகினார். அவர் மின் இணைப்பு வழங்க பிரவீன் குமாரிடம் ரூ.10,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரவீன் குமார், நேற்று (ஜூலை 9 ) திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். அவர்களது ஆலோசனையின் பேரில், பிரவீன்குமார், இன்று மின்வாரிய அதிகாரி அருளானந்தத்திடம் ரூ.10 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், சேவியர்ராணி ஆகியோர் பாய்ந்து சென்று அருளானந்தத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர் இதுபோல வேறு யாரிடமெல்லாம் லஞ்சம் வாங்கினார் என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.