Rock Fort Times
Online News

அரசியல் தலைவர்கள் பரிந்துரைக்கும் ‘பூத்’ ஏஜெண்டுகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு…!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்ப்பது, நீக்குவது, திருத்தங்கள் செய்வதற்கு ஒவ்வொருவரும் நேரடியாக விண்ணப்பித்து பயன்பெற முடியும். இதுதவிர அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் பூத் ஏஜெண்டுகளை (பி.எல்.ஏ.2) நியமிக்கலாம். பூத் ஏஜெண்டுகளாக யாரை நியமிக்க வேண்டுமோ அவர்களை தேர்தல் ஆணையத்துக்கு கட்சி தலைவர்கள் பரிந்துரைக்க வேண்டும். தேர்தல் அதிகாரிகளுடன் நேரடி தொடர்பில் செயல்படும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது. திருத்தங்கள் மேற்கொள்வது பற்றி உரிய ஆவணங்களுடன் நேரடியாக தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பிக்க முடியும். அதை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொள்ளும். வாக்கு திருட்டுக்கள் இந்த மட்டத்தில் இருந்து தான் தொடங்குவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமும், ஆளும் பா.ஜனதாவுககு உடந்தையாக செயல்படுவதாக குற்றம் சாட்டி வருகிறார். இந்த குற்றச்சாட்டை ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. அதேநேரம் தேர்தல் ஆணைய நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தலைவர்கள் பரிந்துரைக்கும் பூத் ஏஜெண்டுகள் நியமனத்தில் புதுவிதியை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. முன்பெல்லாம் வாக்குச்சாவடி ஏஜெண்ட் பெயரை மட்டும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிப்பார்கள். ஆனால் இனி விண்ணப்பபடிவத்தில் சம்பந்தப்பட்ட பூத் ஏஜெண்டின் பெயர், அந்த வாக்குச்சாவடி வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்று இருப்பதற்கான ஆதாரம், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றுடன் புகைப்படத்தையும் ஒட்டி அனுப்ப வேண்டும் என்று அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு ஒருவர் வீதம் 68 ஆயிரம் ஏஜெண்டுகளை அரசியல் கட்சிகள் தேர்வு செய்து நியமிக்க வேண்டும். இதற்கான வேலைகளில் கட்சிகள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்