Rock Fort Times
Online News

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே அதி வேகமாக வந்த தனியார் பஸ் மோதி முதியவர் படுகாயம் : பதைபதைக்க வைக்கும் வீடியோ…!

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே 69 வயது முதியவர் மீது அதி வேகமாக வந்த தனியார் பஸ் மோதியதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  திருச்சி, ஸ்ரீரங்கம் வடக்கு அடைய வளைஞ்சான் பகுதியைச் சேர்ந்த 69 வயதான முதியவர் செந்தில்குமார் இன்று(15-10-2024) ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று செந்தில்குமார் மீது மோதியது. இதில் தலை மற்றும் தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் ஓடிவந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக கண்டோன்மெண்ட் போக்குவரத்து போலீசார், தனியார் பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவர் மீது தனியார் பஸ் அதி வேகமாக மோதும் காட்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருச்சி சிட்டி பகுதியில் கலெக்க்ஷன் எடுப்பதற்காக தனியார் பஸ்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால், பல்வேறு விபத்துகள் நடக்கின்றன. அதுபோன்ற சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. ஆகவே, அதி வேகமாக செல்லும் தனியார் பஸ்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்