Rock Fort Times
Online News

கோவைக்கு நாளை(நவ. 19) வருகை தரும் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு…!

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நாளை(19-11-2025) புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இதற்காக அவர் நாளை மதியம் 1.30 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு செல்கிறார். அங்கு மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுவதுடன், சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். இதைத் தொடர்ந்து அவர் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பிரதமர் மோடி மாலை 3.15 மணிக்கு கொடிசியாவில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து தனியார் விமானம் மூலம் டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே, கோவை வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நடைபெறும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி – எடப்பாடி பழனிசாமி இடையேயான சந்திப்பின் போது கூட்டணி விவகாரம் மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்