திருச்சி மாநகரில் போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், மாநகர போலீசார் கூரியர் நிறுவன பணியாளர்களுடன் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். திருச்சி கே கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்துக்கு மாநகர காவல் ஆணையர் என். காமினி தலைமை வகித்தார். கூட்டத்தில் கூரியர் நிறுவனங்களின் பணியாற்றும் சுமார் 70 பணியாளர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் போதை மாத்திரைகள், ஊசி, மருந்துகள், பவுடர்கள், கஞ்சா உள்ளிட்டவைகள் எந்தெந்த வகையில் பொட்டலங்களாக (பார்சல்களாக) அனுப்பப் படுகின்றன. அவற்றை அடையாளம் காண்பது எவ்வாறு, அனுப்புவோர் மற்றும் பெறுவோர் குறித்த சந்தேகங்கள் இருந்தால் என்ன செய்வது? என விளக்கப்பட்டது. மேலும் முழு முகவரியில்லாமல் வெறும் தொடர்பு எண்கள் மட்டும் எழுதிய பொட்டலங்களை அனுப்பவோ, விநியோகிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மருந்துப் பொருள்கள் போர்வையில் வரும் பொட்டலங்களுக்கு மொத்த விற்பனையாளரிடமிருந்து அவற்றுக்கான ஆவணங்கள் சரியாக உள்ளனவா? எனவும், சோதிப்பது குறித்து விவரிக்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக போதைப் பொருள்களை விநியோகிக் உதவுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இளைஞர்களின் நலன் கருதியும் சமூகத்தில் மீது அக்கறையுடனும் போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறைக்கு உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும் படியான பொட்டலங்கள், முகவரிகள் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் காவல் துணை ஆணையர் விவேகானந்தர் சுக்லா உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
Comments are closed.