திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த கோத்தக்கோட்டை வழியாக அரசு நகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அந்த நிறுத்தத்தில் நிற்காமல் அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பிளஸ்- 2 தேர்வு எழுத காத்திருந்த மாணவி ஒருவர் அந்த பேருந்தின் பின்னாடி ஓடியுள்ளார். இதனைப் பார்த்ததும் அங்கிருந்த சிலர் பேருந்தை நிறுத்த குரல் எழுப்பி உள்ளனர். இதனால், அந்த பேருந்து சற்று தூரம் தள்ளி நின்றது. அதில் அந்த மாணவி ஏறி தேர்வுக்கு சென்றுள்ளார். அந்த மாணவி தடுமாறி சாலையில் விழுந்திருந்தால் விபரீதம் ஏற்பட்டு இருக்கும். இதனால் அவர் தேர்வு எழுத கூட சென்றிருக்க முடியாது. இதனைப் பார்த்து ஆத்திரம் அடைந்த சிலர் இந்த சம்பவத்தை சிலர் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலானதோடு, கடும் விமர்சனங்களையும் எழுப்பியது. இதனைப் பார்த்த போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்த பேருந்தின் ஓட்டுனர் முனிராஜ் என்பவரை பணி இடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து நடவடிக்கை எடுத்தனர். மேலும், அந்த பேருந்தின் நடத்துநர் தற்காலிக பணியாளர் என்பதால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அவரை பணியில் இருந்து விடுவிக்க கோரப்பட்டுள்ளது. அண்மையில் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு ஏசி பேருந்து ஓட்டுநர் செல்போன் பார்த்தபடி பேருந்தை இயக்கினார். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.