Rock Fort Times
Online News

விஜய்யின் வெற்றியை அவரது ரசிகர்களே விரும்பவில்லையா? திருச்சி கிழக்கில் பிசுபிசுக்கும் பிரசாரம்!- தவெக என்ன செய்ய போகிறது?

திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க தலைவர் விஜய் போட்டியிடப் போகிறார் என்கிற அறிவிப்பு வந்ததிலிருந்து ஒட்டுமொத்த மீடியாக்களின் பார்வையும் இத்தொகுதியின் மீது திரும்பியிருக்கிறது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்று தமிழக வெற்றிக்கழகம் தான் என, செல்லும் இடங்களிலெல்லாம் கருத்துரைக்கும் விஜய், அவர் போட்டியிடும் திருச்சி கிழக்கில் தேர்தல் பிரச்சாரத்திற்கான ஆரம்ப பணிகளைக்கூட முன்னெடுக்கவில்லை. இதனால் திருச்சி கிழக்கில் விசில் சத்தம் வாக்காளர்கள் இருக்கும் திசைகளைக்கூட சென்றடையவில்லை என்கிற மனக்குமுறல் அவரது சொந்த கட்சியினருக்கே இருக்கிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய திருச்சி கிழக்கு தொகுதி த.வெ.க.வை சேர்ந்த முக்கியபுள்ளி ஒருவர்., எங்கள் தலைவர் விஜய்க்கு திருச்சி கிழக்கு தொகுதி சாதகமாக இருக்கிறது. அவருக்காக வாக்களிக்க இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பெரும் படையே தயாராக இருக்கிறது. ஆனால், கட்சித்தலைவரான விஜய், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்து வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு சில மணி நேரங்களில் மீண்டும் சென்னையை நோக்கி வான் வழியே சென்றுவிட்டார். தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளன. ஆனால் இன்னும் விஜய் பிரச்சாரத்தை துவங்கவில்லை. பூத் கமிட்டி மற்றும் தொகுதி நிர்வாகிகளிடையே அறிமுகக்கூட்டம் நடத்தவில்லை. மிக முக்கியமாக ஆளும் திமுக அரசை எதிர்த்து களமாட வலிமையான வியூகம் வகுக்கவில்லை. விஜய் வருவதற்கு முந்தையநாள் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சி முன்னணி நிர்வாகிகள் வந்திருந்தாலும் விஜயை திருச்சிக்கு அழைத்து வந்து மீண்டும் அழைத்து சென்றதோடு சரி. அவர்களும் கூடவே சென்று விட்டார்கள். இதனால் தேர்தலில் களப்பணி செய்ய திக்குதிசை தெரியாமல் எங்கள் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் குழம்பிப்போய் இருக்கின்றனர். அதிமுக – திமுகவிற்கு மாற்று சக்தியாக த.வெ.க என்கிற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து மலைக்கோட்டை மண்ணை நம்பி வந்துள்ள எங்கள் தலைவரான விஜயை குறைந்தது ஒருலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால்தானே எங்களுக்கு பெருமை. அதற்கு எங்களின் ஆர்வம் எந்த அளவிற்கு முக்கியமோ அதைவிட அவரின் பிரச்சாரமும் முக்கியம் என்பது ஏனோ விஜய்க்கு தெரியவில்லை. தன் முகத்தை காட்டினால் போதும் மக்கள் வாக்களித்து விடுவார்கள் என நினைக்கிறார். அது தவறு. திரைக்கவர்ச்சி வேண்டாம், உள்ளூர் வேட்பாளர்களான எங்களுக்கு வாய்ப்பளியுங்கள் என தொகுதிக்குட்பட்ட வீட்டு வாசல்களை எல்லாம் தினந்தோறும் காலை மாலை என தொட்டு வணங்கி வாக்கு கேட்கும் இருபெரும் திராவிட கட்சிகளின் வேட்பாளர்களால் விஜய்க்கு வாய்ப்பளித்து திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ ஆக்கலாம் என்கிற மக்களின் மனநிலையும் மாற வாய்ப்பிருக்கிறது. ஆகவே, திருச்சி கிழக்கில் வெற்றி பெற்று தேர்தலில் த.வெ.க.தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்த வேண்டுமென்றால் விஜய் இன்னும் கொஞ்சம் களத்திற்கு இறங்கி வந்து வேலை பார்க்க வேண்டும் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்