Rock Fort Times
Online News

மத்திய அரசு மற்றும் திமுகவை நம்பாதீர்கள்: எங்கள் ஆட்சி அமைந்ததும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து- விஜய் பரபரப்பு பேச்சு!

தமிழகத்தில் வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரம் காட்டி வருகின்றன. முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்தடுத்த வாரங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் மக்களை சந்தித்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தவெக தேர்தல் பிரச்சாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார் விஜய். அதன்படி, இன்று(9-12-2025) புதுச்சேரியில் பொதுமக்களை சந்தித்தார். இதனை முன்னிட்டு, நேற்றே விஜய்யின் பிரச்சாரம் வாகனம் புதுச்சேரியை சென்றடைந்தது. க்யூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் பொதுக்கூட்ட இடத்திற்குள் செல்ல தொண்டர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வெளியே காத்திருந்தனர். சரியாக 11-25 மணிக்கு விஜய் பேச தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்களுக்கும், தொண்டர்களுக்கும் வணக்கம். புதுச்சேரி என்றாலே நம் நினைவுக்கு வருவது மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், வில்லியனூர் மாதா போன்ற வழிபாட்டு தலங்கள் ஆகும். தமிழ்நாட்டை மாநிலமாகவும், புதுச்சேரியை யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு பிரித்துப் பார்க்கிறது. நாங்கள் அப்படி யாரையும் பிரித்துப் பார்ப்பது கிடையாது. நாம எல்லாம் வேறு வேறு கிடையாது. வேறு மாநிலத்தில் இருந்தாலும், வேறு நாட்டில் இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்றுதான். 1977-ல் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சி அமைப்பதற்கு முன்பாக புதுச்சேரியில் 1974ல் அதிமுக ஆட்சி அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு போல புதுச்சேரி அரசு கிடையாது. எங்களுக்கு முழு பாதுகாப்பு கொடுத்து உதவி உள்ளனர். அதற்காக புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் காவல் துறையினருக்கு எங்களது மனமார்ந்த நன்றி. இதைப் பார்த்து தமிழ்நாடு திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். புதுச்சேரி அரசை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு 16 தீர்மானம் போட்டும் இதுவரை மாநில அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. அதேபோல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஐடி கம்பெனி எதுவுமே இல்லை. புதுச்சேரி- கடலூர் ரயில் திட்டம் இன்னும் கொண்டு வரப்படவில்லை. புதுச்சேரியில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. 20 லட்சம் பேர் வசிக்கும் புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கப்படவில்லை. தோராயமாக மட்டுமே நிதி வழங்குகிறார்கள். புதுச்சேரி மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் தாக்கப்படுகிறார்கள். இதுகுறித்து மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த திமுகவை நம்பாதீர்கள். நம்ப வைத்து ஏமாற்றுபவர்கள் தான் அவர்கள். தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமையும். அப்போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க செய்வோம். புதுச்சேரியில் மட்டுமே ரேஷன் கடைகள் இல்லை. எங்கள் ஆட்சி அமைந்ததும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படும். புதுச்சேரி மக்களுக்கு எப்போதும் துணை நிற்போம். இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்