Rock Fort Times
Online News

சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி தி.மு.க இளைஞரணி மாநாடு …!

திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் தகவல்..

திருச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உள்ளார். முன்னதாக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி மத்திய, வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று ( 27.08.2023 ) நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

வருகிற டிசம்பர் மாதம் 17-ந் தேதி சேலத்தில் 2-வது மாநில அளவிலான இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 3½ லட்சம் இளைஞர்கள் தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகள் வகிக்கின்றனர். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் மாநாட்டில் கலந்து கொண்டாலே போதும். அதுவே ஒரு பெரிய கூட்டமாக இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கையோ, வரலாறோ எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. வெறும் ஆட்டமும், பாட்டமும், நகைச்சுவையும், கலை நிகழ்ச்சிகளும் மட்டுமே நடைபெற்றது. அந்த மாநாட்டை நடத்தியவர்களுக்கு நாம் ஏன் இந்த மாநாட்டை நடத்தினோம் என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் தொடர்ந்து நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை தி.மு.க.வின் இளைஞர் அணி நடத்தி வருகிறது. இனியும் தொடர்ந்து நடத்தும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிடாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் அடிமை அ.தி.மு.க., ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு நீட் தேர்வை உள்ளே அனுமதித்து விட்டது. பா.ஜ.க.வின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் சுமார் ரூ.7½ லட்சம் கோடி அளவிலான ஊழல் செய்துள்ளதாக ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு ரூ.280 கோடி செலவிடப்பட்டதாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 6 வழிச்சாலைக்கு அதில் கணக்கு காட்டியுள்ளனர். அதேபோல் ஆயுஷ்மான் பாரத் என்ற மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் அவர்கள் ஊழல் செய்துள்ளனர். ஆனால் பிரதமர் மோடி எந்த கூட்டத்தில் கலந்து கொண்டாலும் கலைஞரின் குடும்பத்தை மட்டுமே குறிவைத்து பேசுகிறார். தமிழ்நாடு முழுவதுமே கலைஞரின் குடும்பம் தான் என்பதை இந்த நேரத்தில் நான் பதிவு செய்கிறேன். ராகுல் காந்தி எம்.பி.யை திட்டமிட்டு பழி வாங்கி, அவருடைய பதவியை பறித்து பல பிரச்சினைகளை பா.ஜ.க. ஏற்படுத்தினாலும், ராகுல் காந்தி நீதிமன்றத்தின் வாயிலாக தன்னுடைய பதவியை மீண்டும் மீட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி 2024-ம் ஆண்டும் தொடரும். அதற்கான காலம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் கட்சியின் முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு, தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின்குமார், மாநகர மேற்கு செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், திருச்சி கிழக்கு மாநகர செயலாளரும், மண்டல குழு தலைவருமான மதிவாணன், உள்பட இளைஞர் அணியினர், மாணவர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்