Rock Fort Times
Online News

பெண்களின் பேராதரவோடு அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் திமுக தான் ஆட்சி அமைக்கும்…- அமைச்சர் கே.என்.நேரு…! 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது.  ஆட்சியை தக்க வைக்க திமுகவும், இழந்த ஆட்சியைப் பிடிக்க அதிமுகவும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகின்றன.  விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது.  சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது. இதனால், இந்த தேர்தலில் நான்கு முறை போட்டி ஏற்படுவது உறுதியாகி உள்ளது. இது ஒரு புறம் இருக்க யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று பிரபல பத்திரிகை நிறுவனங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் கருத்துக்கணிப்புகளை நடத்தி அதனை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் இந்தியா டுடே–சி வோட்டர் கருத்துக் கணிப்பில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 45%  மக்கள் ஆதரவுடன் முன்னிலையில் இருப்பதாகவும், அதிமுக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 33%  ஆதரவு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக்கான் க்ரானிகல் எடுத்த கருத்துக்கணிப்பில் , பெண்களின் இதயங்களை வெல்லும் போட்டியில் திமுக முன்னணியில் இருப்பதாகவும், 2026 தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகளில் 70–80% திமுக கூட்டணிக்கு கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019 முதல் தொடர்ச்சியாக அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுவரும் திமுக கூட்டணி, 2026-லும் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதை கருத்துக் கணிப்பு  முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு  வெளியிட்ட அறிக்கையில், பெண்களின் நம்பிக்கையும் பேராதரவும் திராவிட மாடல் அரசுக்கு அசைக்க முடியாத பலமாக உள்ளது. ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 வீதம் 1.30 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெறுகின்றனர். ‘விடியல் பயணம்’ திட்டத்தால் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து பொருளாதார சேமிப்பை பெறுகின்றனர். இதுவரை 800 கோடிக்கும் மேற்பட்ட பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 6.95 இலட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. பள்ளி குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, தினமும் 20 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். மேலும், 9–14 வயதுடைய 3.39 இலட்சம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பு தடுப்பூசி செலுத்தும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. பெண்களின் உரிமை, பாதுகாப்பு, கல்வி, ஆரோக்கியம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வரும் திராவிட மாடல் அரசு, பெண்கள் நலனில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக 2026 தேர்தலில் திமுக அடையப்போகும் வரலாற்று வெற்றியில் பெண்களே முக்கிய பங்காற்றுவார்கள். 45% என்ற கணிப்பை விட அதிகமான ஆதரவுடன் திமுக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்