2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில், திமுகவும் பம்பரமாக சுழன்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக திமுக மாநில மாநாடு மார்ச் 8ம் தேதி திருச்சியை அடுத்த சிறுகனூரில் நடைபெற உள்ளது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற தலைப்பில் இந்த மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூரில் மாநாடு நடைபெறும் இடத்தில் அண்மையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில் மாநாட்டுக்கான அடுத்தகட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். திருச்சியில் நடக்கும் பெரும்பாலான மாநாடுகள் திமுகவிற்கு திருப்புமுனை மாநாடுகளாக அமைந்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும், நாடாளுமன்ற தேர்தலின் போதும் திருச்சியில் மாநாடுகள் நடைபெற்றன. அந்த தேர்தல்களில் திமுக மாபெரும் வெற்றி பெற்றன. அந்தவகையில் இந்த மாநாடும் மாபெரும் வெற்றி பெற்று திமுகவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று திமுக நிர்வாகிகள் திடமாக நம்புகின்றனர்.

Comments are closed.